திமுக எந்த அடிப்படையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு கொடுத்துள்ளனர் எனத் தெரியவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினகரன் கட்சியான அமமுகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி அதிமுக கொறடா அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களான ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் மீது சபாநாயகரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சபாநாயகர் அந்த 3 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வருவதாக பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று கோவை விமானநிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு புறம்பாக செயல்பட்டதால் கொறடா சபாநாயகரிடம் புகார் அளித்தார். அதனால் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அவர்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் கட்சிக்கு முரணாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடக்கவிருக்கும் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். உளவுத்துறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. தேர்தல் விதிமுறைப்படிதான் நடக்கிறது. இன்றைய தினம் திமுகவுக்கும் அமமுகவிற்கும் உள்ள நெருக்கம் வெளிப்பட்டு விட்டது. அதிமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் கொந்தளிக்கிறார் எனத் தெரியவில்லை. அவர்கள் அவருடைய இயக்கத்தை சார்ந்தவர்கள் அல்ல. அப்படி இருக்கும்போது எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன் இவ்வளவு கோவம் வருகிறது? இதிலிருந்து தினகரன் கட்சிக்கும் திமுகவிற்கும் எவ்வளவு நெருக்கம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.” எனத் தெரிவித்தார்.