டிரெண்டிங்

வாக்கு எண்ணும் மையங்களில் என்னென்ன பாதுகாப்பு ?- சென்னை காவல் ஆணையர் விளக்கம்

வாக்கு எண்ணும் மையங்களில் என்னென்ன பாதுகாப்பு ?- சென்னை காவல் ஆணையர் விளக்கம்

JustinDurai

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை, அறிவுரைகளை வழங்கினார். அடையாறு மண்டலத்திற்குட்பட்ட 173வது வார்டு, தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. மிகவும் பதற்றமான, பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை சிறிய சிறிய பிரச்னைகள் நடந்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

வேளச்சேரியில் வாக்குச்சாவடி மையம் அருகில் 17 பேர் சுற்றி திரிந்தனர். அந்த வார்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள் என்பதால் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். வாக்குசாவடிகளில் பணப்பட்டுவாடா, சாப்பாடு கொடுக்க வந்தபோது மோதல் என சில புகார்கள் வந்துள்ளது. திருவான்மியூர் வாக்குச்சாவடி அருகில் ரூ. 5 ஆயிரத்துடன் பூத் சிலிப்புடன் பெண் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. விதிகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட இருக்கிறது. ஒவ்வொரு மையங்களிலும் துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குசாவடி மையங்களில் உதவி ஆய்வாளர் தலைமையில்  போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரச்சனை நடந்தால் உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது. வாக்கு இயந்திரங்கள் ஸ்டாங் ரூமிற்கு கொண்டு சென்ற பிறகு  மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்னை வரக்கூடிய இடங்களை கண்டறிந்து கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 7,000 போலீசார் தபால் வாக்கு செலுத்தி உள்ளனர். சுமார் 90 சதவீதம் பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்" என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: “அன்பான சென்னை மக்களே”- சென்னை மாநகராட்சி விடுத்த வேண்டுகோள்