தங்கள் அணிக்கு மாறினால் 5 கோடி ரூபாய் வரை தருகிறோம் என எதிர் அணியினர் பேரம் பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. சசிகலா சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி என்று பிரிந்துள்ளது. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு சசிகலா அணிக்கு மாறுவதற்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ சண்முகநாதன், ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் அணியினர் பேரம் பேசி வருகின்றனர். டிடிவி தினகரன் அணியினரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், அணிமாற 5 கோடி ரூபாய் வரை தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறியுள்ளார். இதனிடையே இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓபிஎஸ் அணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.