அனிதா மரணம் தொடர்பாக திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,, திராவிடர் கழகம் தலைவர் வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அழைப்பு விடுக்கப்பட்ட தேமுதிக, மதிமுக, தமாகா கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதிமுக, பா.ஜ.க., பா.ம.க கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கூட்டத்தில், மாணவி அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.