ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு தொகுதியில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.