ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாடு தன்னுடைய பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான ராமகிருஷ்ண ரெட்டி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றது.
இந்நிலையில், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உண்டவள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களாவை சந்திரபாபு நாயுடு காலி செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் மங்களகிரி தொகுதி எம்.எல்.ஏவான ராமகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தியுள்ளார். சந்திரபாபு நாயுடு பங்களாவை காலி செய்யும் வரையில் இந்தப் பிரச்னையை விடமாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பின்னர், ஆந்திர மாநிலத்திற்கான நிர்வாகம் ஹைதராபாத் மாநிலத்தில் இருந்து விஜயவாடாவிற்கு மாறியது. அப்போது, கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த தனியார் வீடு ஒன்றினை முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு முதலமைச்சரின் அலுவலக பணிகளுக்காக லீசுக்கு எடுத்தது. பின்னர், அங்கு பிரஜா வேதிகா என்ற பெயரில் ஆலோசனை கூட்டங்களுக்கான வீட்டை கட்டினர்.
கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச் சூழலுக்கு புறம்பாக சந்திரபாபு நாடு வீடு இருக்கும் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ராமகிருஷ்ண ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில், மேற்கொண்டு அந்த வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்குமாறு சந்திரபாபு நாயுடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அரசு தரப்பில் இன்னும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில், பங்களாவை சந்திரபாபு நாடு காலி செய்ய வேண்டுமென ராமகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தியுள்ளார். இவர், ஆந்திரப்பிரதேச புதிய தலைநகரின் மேம்பாட்டு வாரியத்தில் தலைவராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.