இந்தியாவில் உள்ள மாநில முதலமைச்சர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு பணக்கார முதலமைச்சராக உள்ளார்.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தனியார் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. சந்திரபாபு நாயுடு பணக்கார முதலமைச்சராகவும், திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் மிகவும் ஏழையான முதலமைச்சராகவும் உள்ளார். சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 177 கோடி ரூபாய். மாணிக் சர்க்காரின் சொத்து மதிப்பு ரூ27 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மட்டுமே உள்ளன.
சந்திரபாபு நாயுடுவிற்கு அடுத்தபடியாக, அருணாச்சலபிரதேசம் முதலமைச்சர் பெமா கண்டுவுக்கு 129 கோடி ரூபாய், பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்கிற்கு 48 கோடி ரூபாயும் சொத்துக்கள் உள்ளன. இரண்டாவது குறைவான சொத்துள்ள முதலமைச்சராக மாம்தா பானர்ஜி உள்ளார். அவரது சொத்து மதிப்பு 30 லட்சம் ரூபாய். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்திக்கு ரூ.55 லட்சம் சொத்துக்கள் உள்ளன.
மேலும் இந்த ஆய்வில், மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களில் 10 சதவீதம் பேர் 12 வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 39 சதவீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தொழிற் பட்டப்படிப்பையும், 16 சதவீதம் பேர் பட்டய மேற்படிப்பையும் முடித்துள்ளார். 3 சதவீதம் பேர் டாக்டரேட் படித்துள்ளனர்.
11 முதமைச்சர்கள் மேல் கிரிமினல் வழக்குப் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் மீது 22 வழக்குகள் பதிவாகியுள்ளன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. 20 முதலமைச்சர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை.