டிரெண்டிங்

சந்திரசேகர் ராவ் வெற்றிக்கு வாழ்த்துகூறிய சந்திரபாபு நாயுடு

சந்திரசேகர் ராவ் வெற்றிக்கு வாழ்த்துகூறிய சந்திரபாபு நாயுடு

rajakannan

தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைத்துள்ள சந்திரசேகர் ராவுக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டது. பாஜக தனித்து களம் கண்டது. இதனால், மும்முனை போட்டி நிலவியது. 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே கூறின. அதேபோல், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டிஆர்எஸ் கட்சிதான் முன்னிலை வகித்தது. மொத்தமுள்ள 112 தொகுதிகள் டிஆர்எஸ் 80 இடங்கள் வரை முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அந்தக் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர் ராவ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 22 இடங்களில் தான் முன்னிலை வகிக்கிறது. கிட்டதட்ட கடந்த தேர்தலைவிட 15 இடங்கள் குறைவானது இது. அதேபோல், ஆளும் டிஆர்எஸ் கட்சி கடந்த தேர்தலைவிட 20க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. 

இந்நிலையில், தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள சந்திரசேகர் ராவிற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருடமான சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தெலுங்கானா மக்களின் தீர்ப்பை தெலுங்கு தேசம் கட்சி வரவேற்கிறது. சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்துகள். 5 மாநிலங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். 

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அதனால்தான் மாற்றை நோக்கி சென்றுள்ளார்கள். பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் எங்களுடன் மக்கள் இருக்கிறார்கள். இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கான மாற்றை உருவாக்க உதவும்” என்றார். 

முன்னதாக, தெலுங்கானா டிஆர்எஸ் கட்சி மாபெரும் வெற்றி அடைந்ததற்குப் பின்னால், மின்னணு வாக்குப்பதிவு முறைகேடு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.