ஆந்திர மாநிலம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் இன்று காலை வாக்களித்தார்.
மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மகாராஷ்ட்ராவில் 7, மணிப்பூரில் 1,
மேகாலயாவில் 2, மிஸோராமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
அதோடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பல வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதே போல மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குப்பம் தொகுதியில் போட்டியிடும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகன் நாரா லோகேஷ், மனைவி நாரா புவனேஷ்வரி உட்பட குடும்பத்தினருடன் அமராவதியில் வாக்களித்தார்.