காவிரி விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதேநேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இதனையடுத்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வரைவுத் திட்டத்தை தயாரிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக, கோரிக்கை மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு கூடுதலாக அவசாகம் கேட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அவரது ட்விட்டர் பக்கத்தில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’. இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்” என்று குறிப்பிட்டு தன் கண்டனத்தை பதிவி செய்துள்ளார்.