டிரெண்டிங்

காவிரி தீர்ப்பு.. பதில் சொல்வாரா ரஜினி..? எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள்.. !

காவிரி தீர்ப்பு.. பதில் சொல்வாரா ரஜினி..? எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள்.. !

Rasus

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ரஜினியின் கருத்து என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

காவிரி நீரை பெறுவது தொடர்பாக பல ஆண்டுகளாக கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் பிரச்னை உள்ளது. இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி 177. 25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்துள்ளது. தற்போதை தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும். ஆனால் தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட தண்ணீர் கர்நாடகாவிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடாகவிற்கு 284.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிற்கு 280 டிஎம்சி தண்ணீர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு கூடுதலாக நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பல ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினி அறிவிப்பு வெளியிட்டார். தனிக்கட்சி தொடங்கி வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப்போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். மேலும் ரசிகர்களுடான சந்திப்பில் பேசிய அவர், “ நான் தமிழனா என்று சமூக வலைத்தளங்களில் வரும் தரமற்ற விமர்சனங்கள் வருத்தமளிக்கின்றன. எனக்கு 67 வயதாகிறது. 23 ஆண்டுகள் கர்நாடகாவில் இருந்தேன். எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள். அதனால் நான் பச்சைத் தமிழன்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவிற்கு சாதமாகவும், தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் வெளியாகி உள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ரஜினியின் கருத்து என்னவென்று  நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாட்டில் சிஸ்டம் சரியில்லை. கெட்டுப்போச்சு. அதனை சரிசெய்ய வேண்டும் எனக் கூறிய ரஜினி, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மௌனம் காப்பது ஏன் எனவும் பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.