காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. வழக்கின் அனைத்து கட்ட விசாரணைகளும் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் அதனை குறைத்து 177.25 டிஎம்எசி தண்ணீரை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும். இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமுத்துடன் கவலையில் உள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காவிரி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.