டிரெண்டிங்

சமூக ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிட தடைக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Veeramani

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தேர்தல் விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அரசியல் கட்சிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர்களை எளிதில் அணுகும் வகையில் எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சமூக ஊடகங்கள் மூலமாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதால், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரங்கள் வெளியிட அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தடை விதிக்கவேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நீதிமன்றத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.