வைரமுத்துவை கண்டித்து நடந்த கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ராஜபாளையத்தில் ஜனவரி 7-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து பங்கேற்று ஆண்டாள் குறித்து உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கில் சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களைக் குறிப்பிட்டு வைரமுத்து பேசும்போது, ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வைரமுத்துவின் இந்தப் பேச்சுக்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழவே, அதற்கு வைரமுத்து வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் வைரமுத்து மீது பல காவல்நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைரமுத்துவை கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நயினார் நாகேந்திரன், இந்து மதத்தை அவமதிப்பது போல் இனி யார் பேசினாலும் அவர் கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். வைரமுத்துவை கண்டித்து பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா ஏற்கனவே கடுமையாக பேசியிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நயினார் நாகேந்திரன், அய்யா வைகுண்டர் வழிபாடு சிவசந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட ஆறு பேர் மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.