டிரெண்டிங்

தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா? இன்று தீர்ப்பு

Rasus

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், இன்று அறிவிக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர்
தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை’ என்று
கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்கக் வேண்டும் என ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற ரவீந்திரநாத்தின் மனு மீதான உத்தரவை, இன்று அறிவிக்க உள்ளார்.

ரவீந்திரநாத் மனு ஏற்கப்பட்டால் அவர் வெற்றி செல்லும் என முடிவாகும். ரவீந்திரநாத் மனு தள்ளுபடியானால் தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும்.