இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று கூறமுடியாது என கமல்ஹாசன் தெரிவித்து கருத்து தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் வார இதழில் கமல் எழுதி வரும் தொடர் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறியிருந்தார். இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் கருத்து குறித்து உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐ.பி.சி 500, 511, 298, 295(எ) மற்றும் 505(சி) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நாளை விசாரிக்கப்படவுள்ளது. இந்த பிரிவுகளின் மூலம் அவதூறு பரப்பியது, மத நம்பிக்கை உடையவர்கள் மனதை புண்படுத்தியது, வார்த்தைகள் மூலம் தீங்குவிளைவிப்பது உள்ளிட்ட குற்றங்கள் கமல்ஹாசன் மீது சுமத்தப்பட்டுள்ளன.