கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மாநில குழுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்துள்ளதாகவும், அதேசமயம் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது எனவும், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்ட்களால் அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் கைப்பற்றப்பட்டதில், முரண்பாடுகள் உள்ளதாகவும், மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமை எங்களுக்கு தேவையில்லை எனவும், தலைவர்களை விட கொள்கைகளே மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கூறிய சுதாகர் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸிடம் சரணடையாது என தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக அரசு பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், மத்திய அரசின் இணை செயலாளர்களாக தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்கலாம் என்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உள்ளவர்களை கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.