டிரெண்டிங்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : களத்தில் இறங்க தயாரான வேட்பாளர்கள்

webteam

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் களத்தில் இறங்க வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. அரவக்குறிச்சி தொகுதியில் 91 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முக்கிய வேட்பாளர்களான அதிமுகவின் செந்தில் நாதன், திமுகவின் செந்தில்பாலாஜி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சாகுல் ஹமீது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 63 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 44 மனுக்கள் ஏற்கப்பட்டன. முன்னதாக திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனின் வேட்புமனு முறையாக நிரப்பவில்லை என்பதால் அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுகவினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கூச்சலிட்டனர். இதேபோல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக திமுக, அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நீடித்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணம் தெரிவித்தார். 

இதே போன்று ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் போன்ற கட்சியின் முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதனால் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர்கள் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர்.