முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது அமமுக. தினகரன் வெளியிட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் குறித்த அலசல்..
அமமுகவின் 15 பேர்கள் அடங்கிய முதலாவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், 50 பேர்களை கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அமமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து கோவில்பட்டியில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார், முதல்வர் இபிஎஸ்ஸை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் பூக்கடை என். சேகர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. போடியில் ஓபிஎஸ்ஸை எதிர்த்து முத்துசாமி போட்டியிடுகிறார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி பத்மநாபன் குடியாத்தம் தொகுதியிலும், ஏழுமலை பூந்தமல்லி தொகுதியிலும், மாரியப்பன் கென்னடி மானாமதுரை தொகுதியிலும், கோதண்டபானி திருப்போரூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்.ராஜா பொன்னேரி தொகுதியிலும், வேதாச்சலம் அம்பத்தூர் தொகுதியிலும், எஸ்.இ.வெங்கடாசலம் சேலம் தெற்கு தொகுதியிலும், ரோகினி கிருஷ்ணகுமார் கிணத்துக்கடவு தொகுதியிலும், ராஜசேகரன் மணச்சநல்லூர் தொகுதியிலும், எம்.முருகன் முதுகுளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து விழுப்புரம் தொகுதியில் ஆர்.பாலசுந்தரம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து திண்டுக்கல்லில் ராமுத்தேவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து ஒரத்தநாட்டில் மா.சேகரும் போட்டியிடுகிறார்கள். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் டேவிட் அண்ணாதுரை, திருவாடானையில் வ.ந.து.ஆனந்த், கன்னியாகுமரியில் செந்தில்முருகன், திருவையாறில் வேலு கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்
அதிமுகவில் சீட் கிடைக்காததால் இன்று காலை அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு, சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.