டிரெண்டிங்

புற்றுநோயில் இருந்து மீண்ட நபர் : தனது நிலை யாருக்கும் வரக்கூடாது என செய்யும் சேவை..!

webteam

மதுரையில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த நபர் ஒருவர் புற்றுநோயாளிகளுக்கு மன தைரியத்தை ஏற்படுத்தவதையே தனது சேவையாக செய்துகிறார்.

மதுரையை சேர்ந்த பிலிப்ஸ் ஜெயசேகரன் என்பவர் கடந்த 1993ம் ஆண்டில் இடது தோல் பட்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1996ஆம் ஆண்டு முதுகு தண்டுவடத்தில் மீண்டும் புற்று நோய் ஏற்பட்டு இடுப்பிற்கு கீழ் உள்ள உறுப்புகள் செயல் இழந்தன. 10 அறுவை சிகிச்சையும், கதிரியக்க சிகிச்சையும் கொடுக்கப்பட்ட பின்னர் 1997ஆம் ஆண்டு பூரண குணமடைந்தார். உயிருக்கு போராடிய காலங்களில் மன உளைச்சல் அதிகளவில் இருந்ததாக கூறும் அவர், 1997ம் ஆண்டு குணமடைந்தாலும் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைகளை உதாசினப்படுத்தாமல் சிகிச்சை பெற்றதாக கூறுகிறார்.

இதைத்தொடர்ந்து தான் பெற்ற இன்னல்களை யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கால அனுபவத்தையும், மன அழுத்தத்தையும் போக்குவதற்காக மியூசிக் தெரப்பியும் வழங்கி தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார். சிகிச்சை பெறும் அனைவரும் எந்தவித அச்சமும் கொள்ளாமல் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு அறிவுரைகளையும் முறையாக கடைபிடித்து சிகிச்சை பெற்றால் நிச்சயம் பூரண குணமடையலாம் என நம்பிக்கை அளிக்கிறார்.

பிலிப்ஸ் ஜெயசேகரன் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் உள்ள ரோமங்களை இழந்து உடல் ரீதியான மாற்றங்களையும் மன ரீதியான உளைச்சலையும் அடையும்போது, தன்னம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார். தற்போது இனிமையாக வாழ்ந்து வரும் அவர், தன்னை போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மன தைரியம் அளிப்பதை சேவையாக செய்து வருவதை பலரும் பாராட்டியுள்ளனர்.