தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்ததைவிட 2.86% குறைவான நிதியை பெற்றிருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரான்சு நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு ஊழல் செய்தாக நாடளுமன்றத்தில் புகார் எழுப்பினார்.
இதனையடுத்து இவருக்குப் பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ராகுலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார். அத்துடன் ரஃபேல் போர் விமானம் தொடர்பாக பத்திரிகைகளும் சில தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை 141 பக்கங்களை கொண்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்த எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின. இந்த சிஏஜி அறிக்கை 2007ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும் 2016ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு சிலவற்றை கூறியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “சத்தியமேவ ஜயதே- உண்மை எப்போதும் நிலைக்கும். சிஏஜி அறிக்கை அதை நிலைநாட்டியுள்ளது. ஏதிர்க்கட்சிகளின் மகா பொய் கூட்டணியை சிஏஜியின் அறிக்கை வெளியே கொண்டுவந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.