டிரெண்டிங்

டிச.31-க்குள் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் தகவல்

டிச.31-க்குள் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் தகவல்

Rasus

ஆர்.கே.நகர்‌ தொகுதிக்கு வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது இருந்த 45,000 போலி வாக்காளர்களை நீக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 23-ம் தேதி திமுக அமைப்புச் செயலரும், எம்பியுமான ஆர்.எஸ்.பார‌தி கடிதம் ‌அளித்திருந்தார். இதனிடையே இவ்விவகாரத்தில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியும், போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே ஆர்.கே.நகர் தொ‌குதிக்கு தேர்தல் அ‌றிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்‌தார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ‌தேர்தல் தேதி அறிவிப்புக்கும், வாக்காளர்கள் நீக்கத்துக்கும் தொடர்பில்லை என்றார். மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று கூட ‌போலி வாக்காளர்களைத் தடுத்து நிறுத்த முடியுமென்றும், நீக்கப்பட்ட போலி வாக்காளர் பட்டியல் பூத் ஏஜென்ட்டுகளுக்கத் தரப்படுமென்றும் கூறினார். உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையேற்ற நீதிபதி ‌ரவிச்சந்திரபாபு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வழக்கு என்பதால், இதை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைப்பதாகக்‌ கூறினார். அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், தலைமை நீதிபதி அமர்வுக்கு வரும் முன்னதாகவே, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி விடுமென முறையிட்டார். அதைக் கேட்ட நீதி‌பதி ரவிச்சந்திரபாபு, தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை எவ்வித அடுத்தக்கட்ட நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்காது எனக் கருதுவதாகக் கூறினார்.