மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை உரிமை கொண்டாடும் வாரிசுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி, நினைவிடமாக மாற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவிடமாக்கப் போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்து வரும் நிலையில், சட்டரீதியான வாரிசுகளின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக்க முடியாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், அண்ணன் மகள் தீபாவும் போர்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் ஜெயலலிதாவின் இல்லம் நினைவிடமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்ற பலதரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அது நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார். சட்டரீதியாக அந்த இல்லத்திற்கு யார் உரிமையாளரோ அவர்களுக்கு உரிய இழப்பீடு தந்து நினைவிடமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.