டிரெண்டிங்

ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம்: சுப்ரமணியம் சுவாமி சந்தேகம்

ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம்: சுப்ரமணியம் சுவாமி சந்தேகம்

rajakannan

நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். 

துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கிருந்தபோது மரணமடைந்தார். முதலில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் உடற்கூறு ஆய்வில் அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரின் உடலில் ஆல்கஹால் படிமங்கள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது. மூன்று நாட்கள் ஆன நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இன்னும் துபாயில்தான் உள்ளது.

ஸ்ரீதேவி மரணம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டுள்ள நிலையில் அது குறித்து சில கேள்விகளை சுப்ரமணியம் சுவாமி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்ரீதேவி மரணம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவர் அதிக போதை தரும் மது வகைகள் அருந்தும் பழக்கம் இல்லாதவர். அப்படியிருக்கும் போது அவர் போதையில் குளியல் தொட்டியில் விழுந்ததாக எப்படி கூற முடியும். அவருக்கு வலுக்கட்டாயமாக மது கொடுக்கப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் நிரூபிக்க சிசிடிவி காட்சிகள் இல்லை. மருத்துவ பரிசோதனைகள் நடக்கும் முன்பே மாரடைப்பால் மரணம் என கூறியது ஏன்? இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? என்னிடம் கருத்து கே‌ட்டால் இதைக் கொலை என்றுதான் கூறுவேன்” என்று கூறினார்.

மேலும், ஸ்ரீதேவிக்கும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் இடையே சட்டவிரோதமான உறவு இருந்ததாகவும், அதனால் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.