கடந்த 3 மக்களவைத் தேர்தலிலும் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று வந்துள்ள நிலையில் அந்த வெற்றி நடையை இம்முறை காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட உள்ளது. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் கட்சி தன் வசம் 20 இடங்களை வைத்துக் கொண்டு மீதமுள்ள 8 தொகுதிகளை கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒதுக்கியுள்ளது.
இந்த 8 தொகுதிகளில் ஒன்றான மாண்டியா தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொகுதியின் மறைந்த எம்பியும் காங்கிரஸ் தலைவருமான நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ஹசன் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் அண்ணனும் அமைச்சருமான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடக அரசியலில் தேவ கவுடா குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வாரிசு அரசியல் எனத் தங்கள் குடும்பத்தை பலர் இழிவுபடுத்துவதாகக் கூறி செய்தியாளர் சந்திப்பிலேயே தேவகவுடா கண்ணீர் விட்ட கதையும் நடந்தது.
இந்தத் தேர்தலில் விவசாயிகள் பிரச்னையும் வேலைவாய்ப்பின்மையுமே கர்நாடகாவில் அதிகம் பேசப்படுபவையாக உள்ளன. சுமார் 10 லட்சம் சிறு விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடனை மாநில அரசு தள்ளுபடி செய்தது காங்கிரஸ் - மஜத கூட்டணியின் பெரும் தேர்தல் அஸ்திரமாக உள்ளது. அதே நேரம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தை முன்னிறுத்தி பாஜக பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த 3 மக்களவைத் தேர்தலிலும் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று வந்துள்ள நிலையில் அந்த வெற்றி நடையை இம்முறை காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 17 தொகுதிகளில் வென்றிருந்தது. காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 2 தொகுதியிலும் வெற்றிபெற்றிருந்தன.
2009ல் பாரதிய ஜனதா 19, காங்கிரஸ் 6, மதச்சார்பற்ற ஜனதாதளம் 3 தொகுதியில் வென்றிருந்தன. 2004ல் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா 18 தொகுதியிலும் காங்கிரஸ் 8 தொகுதியிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 2 தொகுதியில் வென்றிருந்தன. அண்மையில் வெளியான விஎம்ஆர் கருத்துக் கணிப்பில் பாஜக 15, காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தது. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே வலுவான அடித்தளம் கொண்ட மாநிலம் கர்நாடகா என்பதால் இங்கு கிடைக்கும் முடிவுகள் மத்தியில் ஆட்சியமைப்பதில் இருகட்சிகளுக்கும் முக்கியமாக இருக்கும்.