டிரெண்டிங்

குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வெற்றி

குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வெற்றி

rajakannan

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக முந்தைய தேர்தலைவிட குறைவான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மாவட்டங்களில் 75 நகராட்சிகள் உள்ளன. இதில், ஜாப்ரபாத் நகராட்சியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதால், மீதமுள்ள 74 நகராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலை முடிவுகள் வெளியாகின. இதில், மொத்தமுள்ள 75 இடங்களில் பாஜக 47ல் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 16 இடங்களை கைப்பற்றியது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. 6 இடங்களில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 4 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை பாஜக அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும் 2013 இல் நடைபெற்ற தேர்தலை காட்டிலும் குறைவான இடங்களையே வென்றுள்ளது. கடந்த முறை 59 நகராட்சி இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. இந்தத் தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேவேளையில், கடந்த தேர்தலில் வெறும் 12 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் இந்த முறை 16-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று ஏறுமுகத்தில் உள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை பிடித்தது. பாஜக ஆட்சியை பிடித்த போதும் கடந்த தேர்தலை விட 16 குறைவான இடங்களை வென்று பின்னடைவை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட 16 இடங்கள் கூடுதலாக கைப்பற்றி முன்னேறியது.