கர்நாடக மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக எடியூரப்பா பதவியேற்றுள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து கவிழ்ந்ததால், அவர் முதலமைச்சர் பதிவியிலிருந்து விலகினார். இந்நிலையில், 105 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், அவரை இன்று மாலை பதவியேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படி, மாலை 6 மணிக்கு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு எடியூரப்பா வருகை தந்தார். கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில், கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.