தமிழகத்தில் அறிவிக்கப்படாத, தேர்ந்தெடுக்கப்படாத பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த அவர், தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத, தேர்ந்தெடுக்கப்படாத பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், மக்கள் மத்தியில் எவ்வித அரசியல் செல்வாக்கும் இல்லாமல், ஆட்சியில் இருப்பவர்களின் பலவீனங்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு பின்வாசல் வழியாக நுழைந்து பாஜக தனது அதிகார வலையை தமிழகத்தின் மீது விரித்துள்ளது என்றும் கூறினார்.
"தமிழகத்தில் இருக்க கூடிய விளிம்பு நிலை மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு விரோதமான ஆட்சி இந்திய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் அதை அதிமுக மூலம் செயல்படுத்த பாஜக முயல்கிறது. இதைத் தடுத்து நிறுத்த மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு இவர்களின் சதியை முறியடிப்பதற்கான நேரம் வந்துள்ளது. சமீப காலமாக கிருஷ்ணசாமி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-விற்கு ஆதரவாக பேசி வருகிறார். இவர் பேசி வருவது அவரை நன்கு அறிந்த எங்களுக்கு வருத்தமளிக்கிறது" என்றும் அவர் கூறினார்
தற்போது அதிமுக நிர்வாகம் குறித்த கேள்விக்கு, அதிமுக இருந்தால்தானே அதை பற்றி பேச முடியும், அதிமுக-வில் நிர்வாகம் இல்லை என்பதே தங்களின் குற்றச்சாட்டு என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.