டிரெண்டிங்

காலையில் கட்சியில் சேர்ந்தவருக்கு மாலையில் வாய்ப்பா? சரவணனுக்கு பாஜகவினர் எதிர்ப்பு

webteam

காலையில் பாஜகவில் உறுப்பினராக இணைந்த திமுக எம்எல்ஏ சரவணன், பிற்பகலிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரவணன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், சரவணனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியிலிருந்த திமுக எம்எல்ஏ சரவணன், காலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பே, தான் பாஜகவில் இருந்ததாகவும், சீட் தராததால் திமுகவில் இருந்து விலகவில்லை என்றும் மீண்டும் பாஜகவில் இணைவது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே ஆலோசித்து வந்ததாகவும் சரவணன் குறிப்பிட்டார். இதனிடையே மதுரையில் சரவணன் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக சரவணன் பிற்பகலில் அறிவிக்கப்பட்டார். முதலில் பேராசிரியர் சீனிவாசன் என பெயரை தவறுதலாக புரிந்துகொண்ட பாஜகவினர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் புதிதாக இணைந்த சரவணனுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதை அறிந்த பாஜகவினர், மதுரை வடக்கு தொகுதி பாஜக தேர்தல் அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு புறப்பட்டு சென்றனர்.