டிரெண்டிங்

“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு

“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு

rajakannan

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குறித்து கடுமையான விமர்சனம் செய்துள்ள பாஜக எம்.எல்.ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தேசிய பெண்கள் ஆணையம் கூறியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சமாஜ்வாடி கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கை கோர்த்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இருகட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று அகிலேஷ்-மாயாவதி கூட்டாக அறிவித்தனர். காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் வாய்ப்பில்லை என்று மாயாவதி திட்டவட்டமாக கூறிவிட்டார். அகிலேஷ் யாதவும் அதனை வழிமொழிந்தார்.

இந்நிலையில், பாஜக தலைவரும் எம்.எல்.ஏ.வான சாதானா சிங், மாயாவதியை கடுமையான வார்த்தைகளில் தாக்கி பேசியுள்ளார். சாதனா பேசுகையில், “உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கண்ணியம் என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர் திரௌபதி. தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பழிதீர்ப்பேன் என்று அவள் சபதமிட்டாள். அதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஆனால், இந்தப் பெண்ணை(மாயாவதி) பாருங்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக அனைத்து கண்ணியத்தையும் அவர் விற்றுவிட்டார். அவர் அமைச்சர்களைவிட மோசமானவர்.

மாயாவதி தன்னை ஒரு பெண் என்று அழைத்துக் கொள்வதையே நான் கண்டிக்கிறேன். பெண் இனத்திற்கே அவர் ஒரு அவமானம். பாஜக தலைவர்கள் அவரது கண்ணியத்தை காத்தார்கள். ஆனால் அவர் அதிகாரத்திற்காக அதனை விற்றுவிட்டார். உலகில் உள்ள அனைத்து பெண்களும் அவரை கண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து, சமாஜ்வாடி எம்.எல்.ஏ சாதனா சிங் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று பகுஜன் சமாஜ் தலைவர் சதீஸ் சந்திரா மிஸ்ரா விமர்சித்துள்ளார். சாதனாவை உடனடியாக மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, மாயாவதி மீதான சாதனா சிங்கின் கடுமையான விமர்சனத்தை தேசிய பெண்கள் ஆணையம் கையிலெடுத்துள்ளது. சாதனா சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, 1995ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியினர் மாயாவதி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏக்களை லக்னோவில் உள்ள ஹெஸ்ட் ஹவுசில் வைத்து கடுமையாக தாக்கி இருந்தனர். இந்த சம்பவத்தை மறைமுகமாக குறிப்பிட்டே சாதனா பேசியுள்ளார் என கூறப்படுகிறது.