தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுக்கள் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ளது. இதில், தெலுங்கானா மாநிலத்தில் பிரிவினைக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் இது. நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனையடுத்து, 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான மொத்த வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தெலுங்கானாவை பொறுத்தவரை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த இரண்டு கூட்டணிகளுக்கு எதிராக பாஜக களத்தில் உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும் முனைப்பில் செயல்பட்டு வரும் பாஜக, தெலுங்கானாவிலும் வெற்றிக்கான திட்டங்களை வகுத்து வருகிறது. தெலுங்காவில் அடுத்த மாதம் தேர்தல் என்றாலும் கூட, இப்போதே தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி வெளியிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
பாஜகவின் தேர்தல் பரப்புரையில் ஆட்சிக்கு வந்தால் வருடா வருடம் 1 லட்சம் பசுக்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் பசுக்களை வாங்கிக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பசுக்கள் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி தயாரிப்பு குழு தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.