தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியாக அமையும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொருத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முரணான கருத்துக்களை அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை கூறி வருகிறார். பாரதிய ஜனதாவைத் தூக்கி சுமக்க நாங்கள் தயாராக இல்லை எனவும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது எனவும் தம்பிதுரை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த போது,மக்களவை தேர்தல் வியூகங்கள் பற்றி பேசினார். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும். அதன் பின் தினகரன் அதிமுகவுடன் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்காக தினகரனை நான் நேரில் சந்தித்து வலியுறத்த உள்ளேன் என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.