டிரெண்டிங்

அதிமுக கொடிக்கம்பத்தில் பறந்த பாஜக கொடி!

அதிமுக கொடிக்கம்பத்தில் பறந்த பாஜக கொடி!

webteam

திண்டுக்கல்லில் அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழக அரசையும், அதிமுக கட்சி விவகாரத்தையும் பாஜக தான் தீர்மானிக்கின்றது என்ற ஒரு குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல முதலமைச்சர் பழனிசாமியையும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தையும் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் கைகளைப் பிடித்து இணைத்து வைத்தார். இதனால் சர்ச்சை மேலும் அதிகமானது. இந்நிலையில் அண்மையில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியின் வற்புறுத்தலின் பேரிலேயே மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்ததாக தெரிவித்திருந்தார். இதனால் பாஜக தான் அதிமுக கட்சி விவகாரத்தை தீர்மானிக்கின்றது என்ற கருத்து வலுப்பெற்றது. 

இவ்வாறு அதிமுக, பாஜக இடையே பல மர்ம முடிச்சுகள் இருந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அதிமுக கொடிக் கம்பத்தில் இருந்த அதிமுக கொடியை இறக்கி விட்டு பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாஜக கொடியை இறக்கியுள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக போலீஸாரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிவு செய்துள்ள கீரனூர் போலீஸார், கொடியேற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.