டிரெண்டிங்

பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் பூஸ்ட் செய்யப்படுகிறதா கட்சிகள்..?

பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் பூஸ்ட் செய்யப்படுகிறதா கட்சிகள்..?

rajakannan

ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த தகவல்களை கொண்டு டிரம்ப் வெற்றி பெற முயற்சிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் அதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. 

தகவல் திருட்டில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சமூக வலைத்தள பிம்பத்தை உருவாக்குவதற்கு உதவுவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடனான தொடர்பு குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான உத்திகளை வகுப்பதற்காக, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸ், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தகவல் திருட்டுக்கு உதவியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்படுவதால், அந்த நிறுவனத்துக்கு ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தேவைப்பட்டால், ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க்கை விசாரணைக்கு அழைக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் குற்றச்சாட்டையும் ஊடகங்களில் வெளியாகி இருக்கும் தகவல்களையும் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும்தான் OBI நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் திங் சுர்ஜிவாலா குற்றம்சாட்டியுள்ளார். 2014-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் சேவையை பாரதிய ஜனதா பயன்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஓபிஐ நிறுவனத்தின் துணைத் தலைவரான ஹிமான்ஷு சர்மாவின் வலைத்தளப் பக்கத்தில், இது குறித்த ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுர்ஜிவாலா கூறுகையில், “ காங்கிரஸ் கட்சி இதுவரை கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் இருந்து எந்த சேவையையும் பெறவில்லை என்று பாரதிய ஜனதாவுக்கு சொல்லிக்கொள்கிறோம். பாரதிய ஜனதா ஏன் இதனை மாற்றிக்கூறுகிறார்கள் என்றால், 2010 பீகார் தேர்தலில் பாரதிய ஜனதாவும் ஜேடியுவும் எப்படி வெற்றி பெற்‌றார்கள் என்பதற்கு இந்த அனலிட்டிகா நிறுவனத்திடம் சேவை பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது” என்று கூறினார்.