டிரெண்டிங்

பஞ்சாபில் பாஜக - அமரிந்தர் கட்சி கூட்டணி உறுதியானது

Veeramani

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து சில மாதங்களுக்கு முன் கேப்டன் அமரிந்தர் சிங் விலகினார். இதன் பின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை அவர் தொடங்கினார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் அமரிந்தர் சிங்கின் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் சிரோன்மணி அகாலி தள் கட்சியிலிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி தொடங்கியுள்ள சுக்தேவ் சிங் திண்ட்சாவின் கட்சியும் இணைந்துள்ளது.

பாஜக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து முடிவு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அமரிந்தர் சிங், திண்ட்சா ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய பின் இந்த அறிவிப்புகள் வெளியாகின. ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா என 3 அணிகள் மோதும் மும்முனை போட்டியாக பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் அமைய உள்ளது. இதற்கிடையே சண்டிகர் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றிபெற்று மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் தேர்தலுக்கு முன் வெளியான இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது