மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளில் 18-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் இக்கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா தவிர்த்து இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக வட மாநிலங்கள் பாஜகவுக்கு கைகொடுத்துள்ளன.
ஹரியானா, உத்திரப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக முழு வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமாக பாஜக தலைமையிலான கூட்டணி 49% வாக்குகளை தன்வசப்படுத்தியுள்ளது. தொங்கு நாடாளுமன்றம் வரும், மூன்றாவது அணி உருவாகும் எனப் பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தனிக்கட்சியாக பாஜக மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றி தன் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டது.
வட மாநிலங்களில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளில் 18-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அசாமில் 9 தொகுதிகள், அருணாசலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 2 தொகுதிகள், மேகலாயா, மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடிமக்கள் திருத்த மசோதா வடகிழக்கு மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வேலை செய்யும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால் குடிமக்கள் திருத்த மசோதா , மாட்டிறைச்சி, உட்கட்சி பூசலால் பாஜக தலைவர்கள் கட்சி மாறியது உள்ளிட்ட பல பிரச்னைகள் எதிரே இருந்த போதிலும் சரியான காய் நகர்த்தல் மூலம் பாஜக வடகிழக்கு மாநிலங்களில் பலமாக கால்பதித்துள்ளது.