டிரெண்டிங்

வேளாண் மசோதா: முதல்வர் ஆதரவு; மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எதிர்ப்பு

வேளாண் மசோதா: முதல்வர் ஆதரவு; மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எதிர்ப்பு

webteam

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில் மாநிலங்களவையில் இரண்டு வேளாண் மசோதாக்களை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்த நிலையில் அதற்கு அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேசினார்.

விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு மசோதா, மற்றும் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மேம்பாடு பாதுகாப்பு மசோதாக்களை அமைச்சர் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையின் ஒப்புதலை பெற அரசு முனைப்பு காட்டி வருகிறது. இவ்விரு மசோதாக்களும் மக்களவையில் சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிரோமணி அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இதனிடையே மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் வேளாண் மசோதாவால், குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும், ஆகையால் இந்த மசோதா தமிழக விவசாயிகளை பாதிக்காது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மாநிலங்கவையில் பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்  “குறைந்தபட்ச ஆதார விலை பற்றி மசோதாவில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை. விவசாயிகளுக்கு அதுவே மிக முக்கியமானது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த மசோதாக்கள் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கின்றன. இதனால் பதுக்கல், கள்ளச்சந்தை உள்ளிட்டவற்றை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்”என பேசியுள்ளார். வேளாண் மசோதாவை மக்களவையில் அதிமுக ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.