திருமணம் தொடர்பான பல விநோதமான சடங்குகள், சண்டைகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருவது வழக்கம்தான். அந்த வகையில் தான் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் நபரை பெண் ஒருவர் “என்னை கட்டிக்கோ கட்டிக்கோ” எனக் கூச்சலிட்டபடி விரட்டிய சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.
கல்யாணத்துக்காக நிச்சயம் செய்யப்பட்டவர்தானே பிறகு ஏன் அப்படி செய்ய வேண்டும் என கேள்வி எழலாம். ஆனால் அந்த மணமகன் செய்த காரியம் அப்படி இருந்திருக்கிறது.
பீகாரின் மஹுலி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே நடைபெறுவதாக இருந்த கல்யாணத்தை அந்த மணமகன் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்திருக்கிறார்.
இதுபோக, பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து ஒரு பைக்கையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் பெற்றுக் கொண்ட பிறகு நிச்சயிக்கப்பட்டபடி கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இதோ அதோ என காரணம் சொல்லி தப்பித்து வந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில், தனது பெற்றோருடன் மார்க்கெட்டிற்கு சென்ற அந்த மணமகள், சந்தையில் அந்த நபரை பார்த்ததும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நபரோ அவ்விடத்தை விட்டு ஓட்டம்பிடிக்கவே, அவரை விரட்டியடி அப்பெண்ணும் பின்னாலேயே ஓடியிருக்கிறார்.
உள்ளூர் வாசிகளின் உதவியுடன் ஒரு வழியாக அந்த நபரை பிடித்த அப்பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார். இருப்பினும் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்றே அந்த நபர் முற்படிருக்கிறார். அப்போதுதான் அந்த நபர் வேண்டுமென்றே கல்யாணத்தை ஒத்திப்போட்டது அம்பலமாகியிருக்கிறது.
பொதுவெளியில் இந்த விவகாரம் பூதாகரமானதும், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சம்மந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து இருதரப்பு குடும்பத்தினரும் சம்மதித்து கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.