அப்துல் கலாமை கிண்டல் பண்ணவர் கமல் கட்சியில் இருக்கலாமா என அதிமுகவின் ஐடி விங்க் ஹரி பிரபாகரன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த 21 ஆம் தேதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்ய’த்தை தொடங்கினார். அப்துல் கலாம் மீதுள்ள பற்றால் அவரது வீட்டில் இருந்தும் கட்சியை தொடங்குவதாக கமல் அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.அதன் பிறகு மதுரையில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து பொதுக்கூட்டத்தில் கமல் உரையாற்றினார். அப்போது அவரை ஆதரித்து பலரும் உரையாற்றினர். கடந்த பல வருடங்களாக தமுஎகச-வில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த பாரதி கிருஷ்ணகுமார் கமலுடன் மேடையை பகிர்ந்து கொண்டதோடு அக்கட்சியிலும் இணைந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பாரதி கிருஷ்ண குமார் அப்துல்கலாம் பற்றி மிக மோசமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். “இவர் ஒரு விஞ்ஞானியா? அவர் என்ன கண்டுப்பிடித்தார்? என்று கேட்டால் தெரியாது என்கிறான். யார் இவரை விஞ்ஞானி என்று சொன்னது என்றால் இன்னொருத்தர் சொன்னார் ஆகவே நான் சொல்கிறேன் என்கிறான்” என காட்டமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோவை பதிவிட்ட அதிமுக ஹரி பிரபாகரன் “யார் இவர்? அப்துல் கலாமை மோசமாக விமர்சித்திருக்கிறாரே? அப்துல் கலாமை மதிக்கும் கமல் இதற்கு என்ன சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.