பீகார் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மயான பூமியில் மாயமாகி வரும் மனித மண்டை ஓடுகள்... பின்னணி என்ன?
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள மயானத்தில் கடந்த ஐந்தரை மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் மண்டை ஓடு திருடப்பட்ட சம்பவம் தெரியவந்ததை அடுத்து, போலிசார் விசாரித்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்துள்ளது.
போலிசார் விசாரணையில், ஃபசில்பூர் சக்ராமா பஞ்சாயத்தின் கீழ் உள்ள அஸ்ரப் நகர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான மயான பூமியை சுற்றுப்பகுதி கிராமங்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்த மயான பூமியைச் சுற்றி 1980 ல் ஒரு எல்லைச்சுவர் இருந்துள்ளது. ஆனால் அந்த சுவர் இடிந்து விழுந்ததும் உள்ளூர் மக்கள் இரும்பு வேலியால் அப்பகுதியில் எல்லைச்சுவரை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், அக்கிராம மக்களில் ஒருவரான மொஹமத் பதுருஜாமாவின் தாயாரின் மண்டை ஓடானது கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லரையிலிருந்து திருடப்பட்டது தெரியவந்தது. இது ஒரு சம்பவம் மட்டுமல்ல கடந்த ஐந்து ஆண்டுகளாக இது போன்ற பல சம்பவங்கள் நடந்து வருவதாகவும், ஆனால் யார் இந்த மண்டை ஓடுகளை திருடிச்செல்கின்றனர்? எதற்காக திருடிச்செல்கின்றனர் என்று தெரியவரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இது போன்று ஐந்து வழக்குகள் பதிவான நிலையில், இந்த திருட்டுகள் ஒரு குறிப்பிட்ட குழுவினர் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றும், இந்த மண்டை ஓட்டுகளைக்கொண்டு பில்லி, சூனியம் போன்ற மோசமான செயலுக்காக திருடப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொடூரமான திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.