டிரெண்டிங்

பெங்களூருல லைஃப் பார்ட்னர்கூட கிடைச்சிடும்; ஆனால் ஃப்ளாட்(மேட்)? - வைரல் பதிவின் பின்னணி!

JananiGovindhan

மெட்ரோ நகரங்களில் வாடகைக்கு வீடு தேடுவதெல்லாம் பெரும் போராட்டமாகவே இருக்கும். அதுவும் பேச்சுலராகவோ, சிங்கிள் பெண்ணாகவோ இருந்தால் உடன் தங்குவோரை தேடிப் பிடிப்பது பெரும் பாடாய் போய் முடியும்.

அந்த வகையில் இந்தியாவின் ஐ.டி. நகரமான பெங்களூருவில் ஃப்ளாட்மேட்களை பிடிப்பது என்பதெல்லாம் குதிரைக்கொம்பான விஷயம்தான். அதுவும் நல்ல கம்பெனியாக இல்லாவிட்டால் அவ்வளவுதான். எப்போதும் சண்டை சச்சரவுடனேயே அந்த ரூம் மேட்களால் இருக்க முடியும்.

இப்படி இருக்கையில், பெங்களூரைச் சேர்ந்த ஒருவர், கச்சேரியில் கூட ஃப்ளாட்மேட்டைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பை இழக்காமல் பார்த்துக் கொண்டார். லக்கி அலியின் கச்சேரியின் போது பிடிக்கப்பட்ட பதாகையுடனான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இசைக் கச்சேரி நடக்கும் கூட்டத்திற்கு நடுவே இருந்த ஒரு நபர் போஸ்டரை வைத்திருப்பதை வைரலான பதிவு மூலம் அறிய முடியலாம்.

அதில், ஃப்ளாட் (மேட்ஸ்) தேவை. #Bachelorette என அந்த பதாகையில் எழுதி அதனை அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தி பிடித்திருக்கிறார். இதனை பகிர்ந்த ஷுப் கந்தெல்வல் என்ற ட்விட்டர் பயனர் , “லக்கி அலியின் இசைக் கச்சேரியின்போது இப்படியான போஸ்டர்களை காட்டுவதுதான் பெங்களூருவில் வீடு தேடுவதன் மோசமான நிலவரம் என்பது உங்களுக்கு தெரியவரும்” என கேப்ஷன் இட்டிருக்கிறார்.

ட்விட்டரில் பகிர்ந்த சில நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் கவனத்தை பெற்றிருந்திருக்கிறது. இதைக் கண்ட பயனர் ஒருவர் “பெங்களூருவில் லைஃப் பார்டனரை கூட சுலபமாக தேடிவிடலாம். ஆனால் ஃப்ளாட்மேட் கிடைப்பது, விருப்பமான வீடு கிடைப்பது அத்தனை எளிதில் முடிந்திடக் கூடிய விஷயமல்ல” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.