நெல்லையின் பெருமையை கூறும் வண்ண ஓவியங்களால் ஆட்சியர் அலுவலகம் பொலிவுடன் காட்சியளிக்கிறது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு சுவர்களில் ஏற்கெனவே வண்ணங்கள் தீட்டப்பட்டு அது அழிந்துபோன நிலையில் மீண்டும் வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ‘அழகிய நெல்லை’ என்ற தலைப்பில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லையின் சிறப்பு அம்சங்களையும், அதன் பெருமைகளையும் கூறும் வகையில் அணைக்கட்டுகள், கோயில்கள், பறவைகள் சரணாலயம் என நெல்லையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச் சுவரில் இந்த வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. அதன் பின்னர் மற்ற அரசு அலுவலக சுவர்களிலும் இந்த ஓவியங்கள் வரையப்பட உள்ளது. சுவர்களில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் வரைவதை தடுக்கும் வண்ணம் வரையப்படும் இந்த ஓவியங்கள் மூலம் நமது நெல்லையை சுவரொட்டிகள் இல்லாத வண்ணமயமான அழகிய நெல்லையாக மாற்ற இயலும் என்றும் ஓவியர்கள் கூறுகின்றனர்.