பந்த்
பந்த் PT
டிரெண்டிங்

இடுக்கியில் ஆளும் பினராயி அரசுக்கு எதிராக காங்கிரஸ் முழுஅடைப்பு போராட்டம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு

PT WEB

பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் "பந்த்" நடைபெற்றது.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் வழியாக செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை பாதுகாக்க, 2004 மற்றும் 2014ம் ஆண்டுளில் மத்திய அரசிற்கு காட்கில் மற்றும் கஸ்தூரிரங்கன் குழுவினர் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.

அதன்படி கடந்த 2022ம் ஆண்டு வனச்சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களை ஒட்டியுள்ள இரண்டு கிலோ மீட்டர் பரப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து இடுக்கியில் மேற்குக் தொடர்ச்சி மலைத்தொடர், தேக்கடி புலிகள் காப்பகம், மூணாறு வனச்சரகம், இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளிட்டவைகளைச் சுற்றியுள்ள இரண்டு கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் இடுக்கி வாழ் மக்கள் தங்கள் நிலத்திற்கு பட்டா வாங்குவது, அதில் வீடுகள் கட்டுவது, அவசர தேவைக்கு நிலங்களை விற்பனை செய்வதில் அதிக சிரமம் கொண்டு வருகின்றனர்.

இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு நிலம் மற்றும் கட்டிட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான பினராயி விஜயன் அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மாலை 6 மணி வரையிலான முழு அடைப்பால் இடுக்கி மாவட்டத்தில் பேருந்துகள், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடங்கியது. கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏலக்காய், தேயிலை உள்ளிட்ட தோட்டங்களில் வேலை நிறுத்தப்பட்டுள்ளதால் இடுக்கி மாவட்டத்தில் தினக்கூலி பணிக்கு செல்லும் தமிழக தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திற்குள் இயக்க்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு அவை தமிழக தமிழக எல்லையான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரையே இயக்கப்படுகின்றன.

ஆனாலும், இடுக்கி மாவட்டத்தை கடந்து சபரிமலை செல்லும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கி முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.