ஆடம்பர பொருட்களின் விலை எப்போதும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் மிகையில்லை. ஆனால் குப்பைகளை கொட்டுவதற்காக பயன்படுத்தப்படும் குப்பை பையின் விலை ஆடம்பர பொருட்களுக்கு நிகரானதாக உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
சாதாரண ஒரு ரோல் குப்பை பையின் விலையே 100 ரூபாய்க்குள் இருக்கும். இல்லையேல் அளவுக்கேற்றபடி சற்று கூட குறைய இருக்கும். ஆனால் Balenciaga என்ற ஆடம்பரம் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் லட்சங்களில் விலை கொண்ட குப்பை பையை உருவாக்கியிருக்கிறது.
ஆம் ஒரு குப்பை பையின் விலை 1790 அமெரிக்க டாலராம். அதாவது இந்திய மதிப்பில் ஒன்றரை லட்சத்திற்கும் மேல். இந்த குப்பை பை வெள்ளை & சிவப்பு, நீலம் & கருப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் & கருப்பு ஆகிய நான்கு வேரியன்ட்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
Trash pouch என பெயரிடப்பட்டிருக்கும் இந்த குப்பை பை பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பளபளப்பான கன்றின் தோலிலிருந்து தயாரிக்கப்பட்டதை தவிர மற்ற அனைத்தும் சாதாரணமான குப்பை பை போலதான் உள்ளது.
இது இழுக்கக்கூடிய வகையில் குப்பைத் தொட்டியின் பையை முடிந்தவரை நெருக்கமாகக் காட்ட தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், குப்பைப் பையை உருவாக்கியவர்கள் அதன் மேல் பளபளப்பை கொடுக்கும் coat-ஐயும் சேர்த்துள்ளனர்.
"உலகின் மிக விலையுயர்ந்த குப்பைப் பையை உருவாக்கும் வாய்ப்பை என்னால் இழக்க முடியவில்லை, ஏனென்றால் ஃபேஷனை யார்தான் விரும்புவதில்லை?" என Balenciagaவின் க்ரியேட்டிவ் டிசைனர் டெம்னா குவாசலியா கூறியிருக்கிறார்.
இந்த ட்ராஷ் பவுச் வின்ட்டர் 2022க்கான ஃபேஷன் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை மாடல் அழகிகள் கையில் பிடித்தபடி பனிப்பொழிவில் ராம்ப் வாக் செய்திருக்கிறார்கள்.
இதே போல கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மளிகை சாமான்கள் வாங்க இந்தியாவில் பயன்படுத்தும் கூடை பையை ஆடம்பர வடிவில் Balenciaga உருவாக்கியிருந்தது. அதன் விலையும் ஒன்றரை லட்சம் ரூபாயாக உள்ளது.