டிரெண்டிங்

முலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்

முலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்

rajakannan

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். 

உடல்நலக் குறைவு காரணமாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முலாயம் சிங் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்கு திரும்பிய முலாயம் சிங்கை, யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்த்துள்ளார். 

இந்தச் சந்திப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத், “சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தேன். அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். முலாயம் சிங் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அகிலேஷ் யாதவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாடி தீவிரமான பிரச்சாரம் மேற்கொண்டது. இரு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக இருந்த நிலையில், யோகி ஆதித்யநாத்தின் இந்தத் திடீர் சந்திப்பு தொண்டர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. யோகி ஆதித்யா சந்திப்பின் போது, அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார். அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் உட்பட மொத்த குடும்பத்தினரும் இருந்தனர். ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

அகிலேஷ் குடும்பத்தாருடன் யோகி ஆதித்யநாத் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.