டிரெண்டிங்

தாயை பிரிந்த அணில் குட்டி : பராமரித்து பாசம் காட்டும் அரசுப் பணியாளர்..!

webteam

புதுக்கோட்டையில் தாயை பிரிந்து தவிக்கும் அணில் குட்டியை அரசு பெண் அலுவலர் தாய் போல பாதுகாத்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் நிலை வருவாய் ஆய்வாளராக பேராவூரணியைச் சேர்ந்த பானுப்பிரியா என்பவர் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் பணியில் இருந்த போது தாயைப் பிரிந்த அணில் குட்டி ஒன்று, அவரது அறையின் இருக்கை அருகே அங்குமிங்கும் ஓடி தவித்துள்ளது. இதனைப் பார்த்த பானுப்பிரியா அந்த அணில் குட்டியை கைகளில் தூக்கி தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அங்கு அணில் குட்டியின் தாயை காணவில்லை. அணில் குட்டியை தனியே விட்டுச் செல்ல மனமில்லாத பானுப்பிரியா, அதை பணி முடிந்ததும் தன்னோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அதன்பின் அதற்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றை அவர் வழங்கியுள்ளார். இதனால் பானுப்பிரியாவோடு பாசத்தோடு ஒட்டிக்கொண்ட அணில் குட்டியும் கடந்த ஒரு வார காலமாக அவரோடு இருந்து வருகிறது. அணில் குட்டியை பிரிய மனமில்லாத பானுப்பிரியா, அதனை பாசத்தோடு தன் கூடவே கூட்டிச் செல்கிறார். வீட்டிலிருந்து பணிக்கு வரும் பானுப்பிரியா தன் கூடவே குட்டியையும் கூட்டிவந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பிஸ்கட் உள்ளிட்ட உணவு வகைகளை அதற்கு வாங்கிக்கொடுக்கிறார். பின்னர் பணியின் போது தனது அருகில் அணில் குட்டியை வைத்துக்கொண்டு, மாலை வீடு திரும்பும்போது அழைத்துச்செல்கிறார்.

இதுகுறித்து பானுப்பிரியா கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் தனது அலுவலக மேசையின் அருகே இந்தக் குட்டி மட்டும் தவித்து வந்ததாகவும், உடனடியாக அதனை மீட்டு தாயுடன் சேர்க்க முயன்றதாகவும் தெரிவித்தார். அங்கு தாய் இல்லாததால் தன்னுடனேயே அழைத்து சென்று விட்டதாகவும், தற்போது ஒரு வார காலமாக அதற்கு தேவையான உணவை கொடுத்து பராமரித்து வருவதாகவும், அதனால் தன்னை விட்டுப் பிரியாமல் அணில்குட்டி கூடவே ஒட்டிக்கொண்டதாகவும், விரைவில் அதன் தாயை தேடி கண்டுபிடித்து ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறினார்.