ஆவடி, திருச்சுழியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி, எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் ஆவடியில் போட்டியிடும் தங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கவில்லை எனவும், மற்ற சில தொகுதிகளில் மட்டும் இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். சின்னங்கள் கேட்பது மற்றும் ஒதுக்குவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்று, ஆவடியில் தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதே போல, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதாகவும், இதனால் தேர்தலை ரத்து செய்வதுடன், தங்கம் தென்னரசை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் திருப்பதி கோரிக்கை வைத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும், அதனை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.