குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேச வேண்டும். சுய விளம்பரத்துக்காக அவர் அதிமுகவை விமர்சிக்கிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளை அடுத்து தினகரன் ஆதரவாளர்களை நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, தினகரன் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காலம் கடந்தது என விமர்சித்திருந்தார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவர் தொடர்பாக, கடுமையான சொல் ஒன்றை பயன்படுத்தியும் குருமூர்த்தி பதிவிட்டிருந்தார். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்தை வெளிப்படுத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குருமூர்த்தி நாவவை அடக்கிக் கொள்ள வேண்டும். இதுபோன்று பேசினால் அதிமுகவின் தொண்டர்களின் எதிர்ப்புக்கு நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும். சுயவிளம்பரத்திற்காகத்தான் அவர் இப்படி பேசுகிறார். அதிமுவில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பேச குருமூர்த்திக்கு தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. அதிமுகவில் பல ஜாதியினர் பல மதத்தினர் இருக்கிறார்கள். ஆனால் ஒருதாய் பிள்ளையாகத்தான் இருக்கிறோம். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் எடுக்கும் நடவடிக்கையை வரவேற்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.