திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்ததில் கணவர், மனைவி உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கைலாசம் பாளையம் கரிச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தறி தொழிலாளியான இவர், ஐயாசாமி என்பவரிடம் மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். கொரோனா காலம் என்பதால் தறியில் சரியான வேலை இல்லாமல் குடும்பம் நடத்தவே சிரமமான சூழ்நிலையில் தவித்து வந்துள்ளனர்
இந்த நிலையில் சுப்பிரமணி மற்றும் மேனகாவிடம் அய்யாசாமி கொடுத்த கடனை திரும்ப கேட்டு அதிகம் தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. நேற்றிரவு அய்யாசாமி குடிபோதையில் சுப்பிரமணியன் வீட்டிற்குச் சென்று கடனை திருப்பி தருமாறு தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
அப்போது சுப்பிரமணியனின் மனைவி மேனகாவை பாலியல் ரீதியாக அத்துமீறி பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து சுப்பிரமணியன் மரண வாக்குமூல கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது குடும்பத்தாருக்கு பாலில் அரளி விதையை அரைத்து குடிக்க செய்துள்ளார்.
இன்று காலை மேனகாவும் சுப்பிரமணியம் உயிரிழந்த நிலையில் பூஜாஸ்ரீ மற்றும் நவீன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது குறித்து சுப்பிரமணியனின் மகள் பூஜாஸ்ரீ கூறியதாவது, ‘’ கொரோனா காலம் என்பதால் அப்பா அம்மாவுக்கு சரிவர வேலை இல்லாமல் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அய்யாசாமி வீட்டிற்கு வந்து குடிபோதையில் தொந்தரவு செய்ததாலும், எனது அம்மாவை தரக்குறைவாக பேசியதாலும் அப்பா இந்த முடிவு எடுத்தார்’’ என்றார்.