டிரெண்டிங்

"நான் கோழை அல்ல, நான் போராளி" – பாஜக ஆட்சி குறித்து கொந்தளித்த மம்தா

"நான் கோழை அல்ல, நான் போராளி" – பாஜக ஆட்சி குறித்து கொந்தளித்த மம்தா

Veeramani

"நான் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்தபோது பாஜகவினர் என் மீது தாக்குதல் நடத்தியது அவர்கள் ஆட்சியில் இருந்து வெளியேறுவதைக் குறிக்கிறது" என்று சமாஜ்வாதி கட்சி நடத்திய பேரணியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கு வந்தபோது அவர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, "கடந்த காலங்களில் நான் பலமுறை தாக்கப்பட்டேன், தடியடியால் பாதிக்கப்பட்டேன், ஆனால் ஒருபோதும் பணிந்ததில்லை...நான் கோழை அல்ல, நான் போராளி. நான் வாரணாசிக்கு வந்தபோது பாஜகவினர் என் மீது தாக்குதல் நடத்தியது என்பது அவர்கள் ஆட்சியில் இருந்து வெளியேறுவதைக் குறிக்கிறது" என்று கூறினார்.

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த மம்தா பானர்ஜி, புதன்கிழமை மாலை வாரணாசியில் 'கங்கா ஆரத்தி'யில் கலந்துகொள்வதற்காக சென்றபோது அவருக்கு எதிராக இந்து யுவ வாஹினி அமைப்பினர் அவரது கான்வாய் முன் கூடி முழக்கங்களை எழுப்பி, கருப்புக் கொடிகளை அசைத்து கோஷங்களை எழுப்பினர், இதனைத் தொடர்ந்து மம்தா தனது வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் நின்றார்.